Monday, May 14, 2007

கோடைகாலக்குறிப்பு 3

இந்த வருடவெயில் கடந்த 25 வருடங்களில் அடித்த வெயிலையும் விட அதிகம் என்று நண்பர் சொன்னார்.ஒவ்வொரு வருடமும் இதேதான் சொல்கிறோம் என்று இன்னொருவர் சொன்னார்.

நேற்று மின்சாரம் இல்லாத இரவைக்கடக்க நேர்ந்தபோது உலகத்தின் வெப்பம் உயர்ந்துவருவதை நானும் உணர்ந்தேன்.

ஒருமுறை படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றிருந்தபோது அந்த மேற்குத்தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் நுழைந்ததும் குளிர் பரவுவதை உணர்ந்தேன்.அதற்கு காரணம் மரங்கள் என்று புரிந்தது.உடனே எனக்கு ஒரு ஆசை தோன்றியது.சென்னையை இப்படி குளிர் நகரம் ஆக்கமுடியுமா? மரங்கள் வளர்த்தால் சாத்தியம் எனில் எத்தனை லட்சம் மரம் வளர்க்கவேண்டும்?

சென்னையில் எல்லோரும் தொட்டிச்செடி வளர்ப்பதன் பின்னிருக்கும் இயலாமை புரிந்தது.புழுக்கம் நிறைந்த வாடகைவீட்டில் மரத்தை எங்கு வளர்ப்பது?

ஒருமுறை புத்தக வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் பரிசாக சிறியமண் சட்டியில் மூங்கில் செடியைக்கொடுத்தார்கள்.அதை எங்கு வளர்ப்பது என்று தெரியாமல் வீட்டின் மூலையில் வைத்திருந்தேன். அது சீன வாஸ்து சாஸ்திரப்படி இங்குதான் வைக்கவேண்டுமென்று வீட்டுக்குவந்த நண்பர் சொன்னார்.

அதை இப்போது என் புத்தக அடுக்கின் அருகில் வைத்திருக்கிறேன். அதிலிருந்து ஆக்ஸிஜன் உருவாகும் என்று அதே நண்பர்தான் சொன்னார்.சென்னை முழுக்க மரம் வளர்ப்பதன் மூலம் அது குளிர் நகரமாகும் என்ற கனவுடன் புழுக்கம் நிறைந்த ஒற்றைப்படுக்கையறை வாடகை வீட்டில்இப்போது என்னால் வளர்க்கமுடிந்தது இந்த சிறிய மூங்கில் செடிதான்.

நேற்று மின்சாரம் இல்லாத அந்த தகிக்கும் இரவில் என் கைபேசியின் ஒளிரும் வெளிச்சத்தில் என் மூங்கில் மரத்தைப்பார்த்தேன். ஒருநாள் அதைத்தேடி பறவைகள் வரலாம். இந்தக்கோடையைத் தாண்டும் கொதிநிலையோடு இன்னொரு கோடை வருவதற்குள் இதன் கிளைகள் விரிந்து என் வாடகைவீட்டின் வெக்கை தணியலாம்.

அந்தச்சிறிய மூங்கில்மரத்தை அருகில் போய்ப்பார்த்தேன். அதன் மெல்லிய கூர்இதழ்கள் வாடிக் கவிழ்ந்திருந்தன. பதட்டமடைந்த நான் அதற்கு நீரூற்றலாம் என்று நினைத்தேன். இருட்டுக்குள் வியர்வையைத்துடைத்துக்கொண்டு மினரல் வாட்டர் இருக்கும் அடுப்படி நோக்கி மெல்ல நடந்தேன்.

கோடைகலக்குறிப்பு 2

கடந்த வாரத்தில் காந்தி படம் பார்த்தேன்.சிறுவயதில் பள்ளியில் அழைத்துபோகையில் காந்தியையையும் நேருவையும் அதிசயத்துணர்ந்த உருவ ஒற்றுமையை மட்டுமே பார்த்திருந்தேன்।இப்போது பார்க்க அதன் தொழில் நுட்பமும் அர்ப்பணிப்பு சார்ந்த உழைப்பும் பென் கின்க்ஸ்லியின் நடிப்பும் பிரமிக்கவைக்கிறது।நேற்று எங்கள் படத்திற்கான ஒரு தேர்வுக்காக ஒரு பள்ளி மைதானத்திற்குப்போனோம்.சும்மா படப்பிடிப்பிற்கான இடம் பார்ல்க வந்திருப்பதாகப் பொய் சொல்லி உள்ளே போனோம்.அங்கிருந்த வயதான காவலாளி என்களை முதலில் அனுமதித்துப்பின்னர் கேமராவைப்பார்த்ததும் வெளியேறச்சொன்னார்.அவரிடம் இது சாதாரண கேமரா என்று எவ்வளவோ சொல்லியும் அவர் அனுமதிக்கவில்லைபோய் அனுமதி பெற்றுக்கொண்டு வாருங்கள்.இல்லையெனில் அனுமதிக்கமாட்டேன்,என்னைத்தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இது என்கடமை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.எங்களுக்கு எரிச்சலாக இருந்தது.ஒருநிலையில் நான் சற்று அதட்டலாக உங்கள் கரஸ்பாண்டண்ட் பெயர் என்ன என்று கேட்டேன்.அவர் சொன்னார்.அவரை எனக்குத்தெரியும் நான்பேசவா என்று கேட்டேன்.அப்படி ஒருவரை எனக்குத்தெரியாது என்றபோதும் நான் அப்படிச் சொன்னேன்.அவரிடம் கரஸ்பாண்டண்டின் எண் என்று கேட்டேன்.அவர் தெரியாது என்று சொன்னார்.'அப்ப என்ன செய்யறது'சொல்லுங்க என்று நான் அவரிடம் கோபமாகசொன்னேன்.அதெல்லாம் தெரியாது சார்.இங்க எடுக்கக்கூடாது.தப்பா நினைக்காதீங்க என்று திரும்பவும் சொன்னார்.இதற்கிடையில் உடன்வந்த நண்பர் அவரை ஒரு நிமிடம் தனியா வாங்க என்று அழைத்துப்போய் பணம் ஏதாவது வாங்கிகங்க என்று சொன்னதும் அவர் அதை மறுத்து எனக்கு னான் வாங்குற சம்பளமே போதும் சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.இதற்கிடையில்அவருக்குத்தெரியாமல் நான் படம்எடுக்க ஆரம்பித்திருந்தேன்.அதைக்கவனித்த அவர் திரும்பவும் அருகில் வந்து எடுக்ககூடாது சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க॥அனுமதி வாங்கிட்டு வாங்க ''ஹலோ॥இது ஷூட்டிங் இல்ல.சும்மா டெஸ்ட்.''எதுன்னாலும் இருக்கட்டும் சார்.தயவுசெய்து எட்டுக்காதீங்க'ஒருநிலையில் கோபம்வந்த நாங்கள் எல்லோரும் அங்இருந்த ஒருவரை சும்மா அனுமதி வாங்க அனுப்புவதுமாதிரி அனுப்பினோம்.அவர் வரட்டும் வந்தபிறகு தயவுசெய்து எடுங்க.யாராவ்து பாத்தா என்வேலை போயிடும்'அதெல்லாம் போகாதுங்க.ஏற்கனவே இன்க பலமுறை வந்து எடுத்திருக்கிறோம்(ஏற்கனவே ஒருமுறை அங்கிருக்கும் காவலாளிக்கு அறுபது ரூபாய் குவார்ட்டருக்காக அவர் கேட்டு கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறோம்)எனவே இவரையும் சமாளிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் மசியவில்லை. ஒருநிலையில் அவர் சமாதானமாகாமல் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றார்.நாங்கள் அவரை மனசுக்குள் திட்டிவிட்டு அவரது அறியாமையைக்கேலி செய்துவிட்டு என்கள் வேலையைத்தொடர்ந்தோம்.கொஞ்சநேரத்தில் அவர் ஒரு ஆசிரியையுடன் திரும்பி வந்தார்.ஆசிரியையும் அவர் சொன்னதையே திரும்பதிரும்பச்சொன்னாள்.திருப்பி என்ன சொன்னாலும் அவர் தயவுசெய்து நீங்க அனுமதி வாங்கிட்டு எடுங்க சார் என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினோம்.எனக்கு நடந்த சூழல் ஒருநிலையில் சிரிப்பாகவும் இருந்தது.சற்றே கேலியாக அந்த காவலாளியை பார்க்கும் போது அவர் கையில் நீளமான தென்னங்கீற்றின் நடுவிலிருக்கும் நீளமான கம்பைக்கையில் வைத்திருந்தார்.எனக்கு ஆச்சரியமாக காந்தியின் ஞாபகம் வந்தது.உடனே நான் சொன்ன பொய்களும்,அவர் தோற்றத்தைப் பார்த்ததும் என்இயல்புக்கு மாறாக னான் அவரை அதட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்லிய குற்ற உணர்வு எனக்குள் வந்தது.இரவெல்லாம் காந்தி படமும் அவர் விவசாயிகளுக்காக கைது செய்யப்படும்போது நீதிபதி ஜாமீன் தொகை கட்டச்சொல்லும்போது கட்டமுடியாது.என்பதைத் தயவுடன் தெரிவிக்கிறேன் என்பார்.நீதிபதி வேறு வழியில்லாமல் அவரை ஜாமீன் கட்டாமல் விடுதலை செய்வார்.அந்தக்காட்சி ஞாபகம் வந்தது.அந்த அதட்டல் எனக்குள் ஏன் ஏற்பட்டது? நண்பர் எந்தக்குற்ற உணர் வும் இல்லாமல் அவருக்கு லஞ்சமாகப் பணம் தருவதாகச்சொன்னது எப்படி?கேள்விகள் இன்னும் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

Friday, May 11, 2007

கனவு நிலை உரைத்தல்

கனவுகளைப்பற்றி யோசிப்பதும் அவற்றைத்திரும்ப நினைத்துப்பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கிறது
நேற்றுவந்த கனவில் இடிந்த வீடுகளும் கோழிக்குஞ்சுகளும் இருந்தன.
மண்சுவர் நான்கடி இருக்கும்.அதனருகில் ஒரு முருங்கைமரம் இருந்தது
அங்கு படுத்திருந்தவர் இறந்துபோன தாத்தா என்றுதான் நினைக்கிறேன்.

இன்னொருபுறம் திண்ணையிலிருந்து கோழிக்குஞ்சு ஒன்று உடைந்த முட்டைகூடு ஒன்றை தூக்கிக்கொண்டு என்காலடியில் கடந்து சென்றது
அதனுடன் அதன் தாயான பெரிய கோழியும் வந்தது

அந்தக்காட்சி கனவின்போதே சிலிர்ப்பாய் இருந்தது
பிறகு தூங்கும் தாத்தா இப்போது அப்பாவாக இருந்தார்
அவரை எழுப்புவதற்காக கைப்பனியனுடன் ஒருவர் வந்தார்
யார் என்று பார்த்தால் அவரும் அப்பாவாகவே இருந்தார்.

Thursday, May 10, 2007

2007 காலை 8.00

மனிதர்கள் உபரியாய்த்தொங்கும் நகரப்பேருந்துகள்

குறுக்கிடும் மிதிவண்டிகள்

கூந்தல்முடித்து நகரும்
அக்குள் வியர்த்த பெண்கள்

தூக்கம் கலையாத சீருடைக்குழந்தைகள்

பச்சை அம்புக்குறிகள்
பெருஞ்சாலைகளைத்திறந்து மூடின

ஆகாயவிரிவில்
பொன்னிறக் கிரணங்கள் வெளுத்து
நரைத்தது சூரியன்

பறவைகளை இரைதேடவும்
மனிதர்களை அலுவலகங்களுக்கும் துரத்த
கரியமிலப்புகையுடன் ஆயிற்று
ஆதியில் தேவன் அருளிய
ஒரு காலைப்பொழுது

கோடைகாலக்குறிப்பு

சென்றவாரத்தின் மதியப்பொழுதில் தெருவில் ஒரு குரலைக்கேட்டு சன்னலுக்கு வந்தேன்."மா...ம்..பழம்..மாம்பழம்' என்று அந்தக்குரல் தெருவின் வெயிலில் ஒரு பறவைபோலத்தணிந்து பறந்தது।அந்தக்குரலுக்கு உரியவரின் முகத்தைப்பார்க்கலாமென்று வாசலுக்குவந்தேன். தெருவின் முனையில் தேய்ந்தரப்பர் செருப்புகளுடன் னடந்து செல்லும் இரண்டு கால்களைத்தான் என்னால் பார்க்கமுடிந்தது।

தெருவில் யாரும் இல்லை।இரண்டு காகங்கள் குறுக்காகப்பறந்து மறைந்தன।
வீட்டுக்குள் வந்தபிறகும் மாம்பழம் எனும் அந்தக்குரலின் தீனம் என்னுள் எதிரொலித்துக்கொண்டிருந்தது.மாம்பழம் குறித்த சிலகாட்சிகள் அதன் பின்எழுந்தன।

வடபழ்னியிலிருந்து சாலிகிராமம் வரும் அருணாசலம் சாலலயிலிருக்கும் பட்டுக்கோட்டை ஒயின்ஷாப்பிலிருந்து சில காதங்கள் தள்ளி சிறிய சாக்குவிரிப்பில் குவித்துவைக்கப்பட்ட மாம்பழங்கள் இருந்தன।தலைக்குமேல் அசையும் வேப்பமரத்தின் னிழல் கருதி அவர் அங்கே கடை விரித்திருக்கலாம்। வார இதழ்களை விற்கும் கடையின் அருகே அவர் அமர்ந்திருந்ததால் அதை வாங்குவதற்காக னான் எனது இருசக்கரவாகனத்திலிருந்து இறங்கும்போது முதலில் பொன்னிறத்திலிருந்த
மாம்பழங்களைப்பார்த்தேன்। பிறகு வார இதழ்களை வாங்கிவிட்டு என்வண்டிக்கு அருகே வருகையில் மாம்பழம் என்ற அந்தகுரலைக் கேட்டுத்திரும்பி அந்தமனிதரைப்பார்த்தே ।சவரம் செய்யாத னரைத்த தாடியுடன் ஒல்லியாக இருந்த அவர் தோணியது।அருகில் வந்ததுமதோட்டத்துப்பழ்ங்கள் என்று சொல்லி வினோதமமன அதன்பெயரையும் அவர் சொன்னார்।பிரத்தியேகமாக அதன் இனிப்பு
பற்றிச்சொன்ன அவர் ஏற்கனவே கேறப்பட்டிருந்த ஒரு ம்ஆம்பழத்திஅ எடுத்த்கு ஒரு கீறலை அரிந்து என்னிடம் தந்தார்।னார் இல்லாமல் இருந்த அந்த மாம்பழம் தித்திப்பாகவே இருந்தது।என் முகத்தைபபார்த்ததும் எப்படி?எனும் முகபாவத்துடன் என்னைப்பார்த்தார்।னானும் புன்னகைத்தேன்।

அதன்பிறகு தினமும் அவரிடம் மாம்பழம் வாங்கினேன்। தெலுங்கு கலந்த தமிழ் பேசும் அவருக்குமெனக்கும் இடையில் சம்பாசணைகள் எதுவும் அதிகமில்லை।வேலைமுடித்து வீட்டுக்கு வரும்போது ஐந்து மாம்பழங்கள்
இரண்டு னாளைக்கு ஒருமுறை னான் அவரைப்பார்த்தேன்।தொலைவில் என்னைப்பார்த்ததும் னீலனிற பிளாஸ்டிக்பையில் எனக்கான மாம்பழங்கள் இருக்கும்।

அன்று னான் தாமதமாக மூன்றுமணிக்கு னான் மதிய உணவுக்குத்திரும்பிபோது அவரது விரிப்பில் மாம்பழங்கள் இல்லை। னான் அருகில் வந்ததும் பிளாஸ்டிக் பையுடன் எழுந்து னின்றார்।அவ்வளவுதான் இந்த சீசன் என்று சொல்லி பழத்தைக் கொடுத்தார்।கடைசியாக கூடையிலிருந்த ஒரு மாம்பழத்தைக் கொசுறுவாகக்கொடுத்து அவ்வளவுதான் சார்॥இதுதான் இந்த சீசனுக்கு கடைசி என்றார்।

வீட்டுக்குவந்தும் அந்தப்பருவத்தின் கடைசிமாம்பழ்த்தைப்பார்த்தேன்।இந்தப்பருவத்தின் கடைசி என்கிற சொல் எனக்கு வினோதமான அர்த்தங்களைத்தந்தது।

அதன்விதையை வாடகைவீட்டின் பின்னால் இருந்த இடத்தில் மண்மூடிவைத்தேன்।அவர் சொன்னதுபோல அந்தபருவத்தில் அதற்குப்பிறகு மாம்பழங்கள் கிடைக்கவுமில்ல।னான் அதைத்தேடி வாங்கவுமில்லை


அடுத்த வெயில் காலம் வந்துவிட்டது.மாம்பழம் எனும் ஒலி தெருக்களில் கேட்கிறது।வீடு மாறியபிறகு அந்த கடைசிமாம்பழத்தின்விதை முளைத்ததா என்பதும் தெரியவில்லை।வயதான அந்த ம்னிதரையும் னான் பார்க்கவில்லை

Wednesday, May 9, 2007

வலையுலகில் நானும்....

தமிழையும் என் தொழிலையும் இனைத்து ஒரு புது முயற்சி...

செழியன்.