Friday, May 11, 2007

கனவு நிலை உரைத்தல்

கனவுகளைப்பற்றி யோசிப்பதும் அவற்றைத்திரும்ப நினைத்துப்பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கிறது
நேற்றுவந்த கனவில் இடிந்த வீடுகளும் கோழிக்குஞ்சுகளும் இருந்தன.
மண்சுவர் நான்கடி இருக்கும்.அதனருகில் ஒரு முருங்கைமரம் இருந்தது
அங்கு படுத்திருந்தவர் இறந்துபோன தாத்தா என்றுதான் நினைக்கிறேன்.

இன்னொருபுறம் திண்ணையிலிருந்து கோழிக்குஞ்சு ஒன்று உடைந்த முட்டைகூடு ஒன்றை தூக்கிக்கொண்டு என்காலடியில் கடந்து சென்றது
அதனுடன் அதன் தாயான பெரிய கோழியும் வந்தது

அந்தக்காட்சி கனவின்போதே சிலிர்ப்பாய் இருந்தது
பிறகு தூங்கும் தாத்தா இப்போது அப்பாவாக இருந்தார்
அவரை எழுப்புவதற்காக கைப்பனியனுடன் ஒருவர் வந்தார்
யார் என்று பார்த்தால் அவரும் அப்பாவாகவே இருந்தார்.

3 Comments:

Anonymous Anonymous said...

அருமையான பதிவு...கனவுகள் எப்போதுமே குழப்பமாகவே வருகின்றன.கனவில் ஒரு முறை என் அடிபட்ட காயத்தை என் நெருங்கிய நண்பன் ஒருவன் தன் நீண்ண்ட நாவினால் நக்கிக் கொண்டிருந்தான்..அப்போது நான் என் வாலை ஆட்டிக்கொண்டிருந்தேன்.

அடிக்கடி வரும் கனவு...

ரயிலை பிடிக்க ஓடுவேன்...ஒவ்வொரு முறையும் தவறவிடுவேன்.என்னை கடந்து ரயில் செல்லும்.. திடுக்கிட்டு எழுந்து விடுவேன்.

freud-ஐ கேட்டால் முதல் கனவு நாம் மிருகங்களாய் இருந்ததன் மிச்சம் என்பார். இண்டாம் கனவு நம் நம்பிக்கையின்மையின் உள்மன வெளிப்பாடு என்று சொல்லலாம்.

May 11, 2007 at 4:53 AM  
Blogger Chezhian Buddha said...

கடந்த வாரத்தில் காந்தி படம் பார்த்தேன்.சிறுவயதில் பள்ளியில் அழைத்துபோகையில் காந்தியையையும் நேருவையும் அதிசயத்துனந்த உருவ ஒற்றுமையை மட்டுமே பார்த்திருந்தேன்.இப்போது பார்க்க அதன் தொழில் நுட்பமும் அர்ப்பணிப்பு சார்ந்த உழைப்பும் பென் கின்க்ஸ்லியின் நடிப்பும் பிரமிக்கவைக்கிறது.

நேற்று எங்கள் படத்திற்கான ஒரு தேர்வுக்காக ஒரு பள்ளி மைதானத்திற்குப்போனோம்.சும்மா படப்பிடிப்பிற்கான இடம் பார்ல்க வந்திருப்பதாகப் பொய் சொல்லி உள்ளே போனோம்.

அங்கிருந்த வயதான காவலாளி என்களை முதலில் அனுமதித்துப்பின்னர் கேமராவைப்பார்த்ததும் வெளியேறச்சொன்னார்.அவரிடம் இது சாதாரண கேமரா என்று எவ்வளவோ சொல்லியும் அவர் அனுமதிக்கவில்லை
போய் அனுமதி பெற்றுக்கொண்டு வாருங்கள்.இல்லையெனில் அனுமதிக்கமாட்டேன்,என்னைத்தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இது என்கடமை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார்.எங்களுக்கு எரிச்சலாக இருந்தது.ஒருநிலையில் நான் சற்று அதட்டலாக உங்கள் கரஸ்பாண்டண்ட் பெயர் என்ன என்று கேட்டேன்.அவர் சொன்னார்.அவரை எனக்குத்தெரியும் நான்பேசவா என்று கேட்டேன்.அப்படி ஒருவரை எனக்குத்தெரியாது என்றபோதும் நான் அப்படிச் சொன்னேன்.அவரிடம் கரஸ்பாண்டண்டின் எண் என்று கேட்டேன்.அவர் தெரியாது என்று சொன்னார்.'அப்ப என்ன செய்யறது'சொல்லுங்க என்று நான் அவரிடம் கோபமாகசொன்னேன்.

அதெல்லாம் தெரியாது சார்.இங்க எடுக்கக்கூடாது.தப்பா நினைக்காதீங்க என்று திரும்பவும் சொன்னார்.

இதற்கிடையில் உடன்வந்த நண்பர் அவரை ஒரு நிமிடம் தனியா வாங்க என்று அழைத்துப்போய் பணம் ஏதாவது வாங்கிகங்க என்று சொன்னதும் அவர் அதை மறுத்து எனக்கு னான் வாங்குற சம்பளமே போதும் சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார்.இதற்கிடையில்அவருக்குத்தெரியாமல் நான் படம்எடுக்க ஆரம்பித்திருந்தேன்.

அதைக்கவனித்த அவர் திரும்பவும் அருகில் வந்து எடுக்ககூடாது சார்.தயவு செய்து தப்பா நினைக்காதீங்க..அனுமதி வாங்கிட்டு வாங்க '
'ஹலோ..இது ஷூட்டிங் இல்ல.சும்மா டெஸ்ட்.'
'எதுன்னாலும் இருக்கட்டும் சார்.தயவுசெய்து எட்டுக்காதீங்க'

ஒருநிலையில் கோபம்வந்த நாங்கள் எல்லோரும் அங்இருந்த ஒருவரை சும்மா அனுமதி வாங்க அனுப்புவதுமாதிரி அனுப்பினோம்.
அவர் வரட்டும் வந்தபிறகு தயவுசெய்து எடுங்க.யாராவ்து பாத்தா என்வேலை போயிடும்'
அதெல்லாம் போகாதுங்க.ஏற்கனவே இன்க பலமுறை வந்து எடுத்திருக்கிறோம்(ஏற்கனவே ஒருமுறை அங்கிருக்கும் காவலாளிக்கு அறுபது ரூபாய் குவார்ட்டருக்காக அவர் கேட்டு கொடுத்துவிட்டு எடுத்திருக்கிறோம்)எனவே இவரையும் சமாளிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் மசியவில்லை. ஒருநிலையில் அவர் சமாதானமாகாமல் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றார்.

நாங்கள் அவரை மனசுக்குள் திட்டிவிட்டு அவரது அறியாமையைக்கேலி செய்துவிட்டு என்கள் வேலையைத்தொடர்ந்தோம்.

கொஞ்சநேரத்தில் அவர் ஒரு ஆசிரியையுடன் திரும்பி வந்தார்.ஆசிரியையும் அவர் சொன்னதையே திரும்பதிரும்பச்சொன்னாள்.திருப்பி என்ன சொன்னாலும் அவர் தயவுசெய்து நீங்க அனுமதி வாங்கிட்டு எடுங்க சார் என்பதையே சொல்லிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் எரிச்சலுடன் அங்கிருந்து வெளியேறினோம்.

எனக்கு நடந்த சூழல் ஒருநிலையில் சிரிப்பாகவும் இருந்தது.சற்றே கேலியாக அந்த காவலாளியை பார்க்கும் போது அவர் கையில் நீளமான தென்னங்கீற்றின் நடுவிலிருக்கும் நீளமான கம்பைக்கையில் வைத்திருந்தார்.எனக்கு ஆச்சரியமாக காந்தியின் ஞாபகம் வந்தது.உடனே நான் சொன்ன பொய்களும்,அவர் தோற்றத்தைப் பார்த்ததும் என்இயல்புக்கு மாறாக னான் அவரை அதட்டியதும் நினைவுக்கு வந்தது. மெல்லிய குற்ற உணர்வு எனக்குள் வந்தது.

இரவெல்லாம் காந்தி படமும் அவர் விவசாயிகளுக்காக கைது செய்யப்படும்போது நீதிபதி ஜாமீன் தொகை கட்டச்சொல்லும்போது கட்டமுடியாது.என்பதைத் தயவுடன் தெரிவிக்கிறேன் என்பார்.நீதிபதி வேறு வழியில்லாமல் அவரை ஜாமீன் கட்டாமல் விடுதலை செய்வார்.அந்தக்காட்சி ஞாபகம் வந்தது.

அந்த அதட்டல் எனக்குள் ஏன் ஏற்பட்டது? நண்பர் எந்தக்குற்ற உணர் வும் இல்லாமல் அவருக்கு லஞ்சமாகப் பணம் தருவதாகச்சொன்னது எப்படி?

கேள்விகள் இன்னும் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

May 12, 2007 at 8:45 PM  
Anonymous Anonymous said...

செழியன்...பள்ளி சம்பந்தமான இந்த விசயத்தை தனி பதிவாகவே போட்டிருக்கலாம்.பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பதிவு சம்பந்தமான விசயத்தை மட்டும் போட்டால் நன்றாக இருக்கும்.

May 12, 2007 at 11:06 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home